Sunday, July 20, 2014

தமிழகம் முழுவதும் குரூப் 1 முதல்நிலை தேர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று நடந்தது. இத்தேர்வை சுமார் 1.62 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். தேர்வு கூடங்கள் அனைத்திலும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மாநில அரசு மூலம் தேர்வு செய்யப்படும் உயர் பதவிகளான துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி குரூப் 1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர் (3), போலீஸ் டிஎஸ்பி (33), வணிகவரித் துறை இணை ஆணையாளர் (33) மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் (10) ஆகிய 79 பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு ஜூலை 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று குரூப் 1 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 606 பேர் பங்கேற்றனர். சென்னையில் மட்டும் சுமார் 35,675 பேர் எழுதினர். தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 32 தேர்வு மையங்கள் என 557 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் சைதாப்பேட்டை மேல்நிலைப்பள்ளி, ஆர்.ஏ.புரம். ராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. கெல்லட் மேல்நிலைப்பள்ளி, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, மயிலாப்பூர் சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 108 அரசு பள்ளிகள், கல்லூரிகளில் இத்தேர்வு நடந்தது.

காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது. தேர்வு எழுதுவதற்கு பல மையங்களில் ஆண்களும், பெண்களும் காலை 8 மணிக்கே வரத் தொடங்கினர். தேர்வு எழுத டிகிரி தேர்ச்சி அடிப்படை தகுதியாக கேட்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வை ஏராளமான முதுநிலை, மருத்துவம், இன்ஜினியர் படித்த பட்டதாரி மாணவ&மாணவிகளும் எழுதினர். பல பெண்கள் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற நேரத்தில் குழந்தையை கணவன்மார்கள் பார்த்துக் கொண்டனர். தேர்வு எழுதுவோர், சோதனை செய்யப்பட்ட பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கால்குலேட்டர், செல்போன் போன்றவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடக்காமல் தடுக்க மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், தலைமை கண்காணிப்பாளர் 570 பேர், கண்காணிப்பாளர் 7009 பேர், ஆய்வு அதிகாரிகள் 570 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னையில் மட்டும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கண்காணிப்பில் தேர்வுகள் நடந்தது. பல்வேறு மையங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. தேர்வு நடத்த அனைத்து இடங்களிலும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. முறைகேடு நடக்கும் என்று கண்டறியப்பட்ட மையங்கள் வெப் கேமரா மூலம் சென்னையில் இருந்து கண்காணிக்கப்பட்டது.  தேர்வு நடைபெற்ற அனைத்து பள்ளிகள் முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு நடக்கும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வு கூடங்கள் அமைந்துள்ள இடங்கள் வழியாக செல்லும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.  

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன்,  திருவல்லிக்கேணியில் உள்ள சி.எஸ்.ஐ. கெல்லட் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளியில் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா உடன் இருந்தார். முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக மெயின் தேர்வு நடத்தப்படும். மெயின் தேர்வில் வெற்றி பெறுவோர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர், மெயின் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

No comments: