Thursday, May 7, 2015

பிஇ கவுன்சலிங்: விண்ணப்பிப்பது எப்படி? -பொன்.தனசேகரன்

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங்கிற்கு மே 6-ஆம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பிளஸ் டூ படித்து விட்டு பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் உள்ள இடங்கள், பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் (தமிழ் மீடியம்) பட்டப் படிப்புகளில் உள்ள இடங்கள், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இடங்கள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் கவுன்சலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். வழக்கம் போல, இந்த ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் இந்தக் கவுன்சலிங்கை நடத்துகிறது.