Saturday, August 9, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசுப்பேருந்து சலுகைகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு வேறு எதுமாதிரியான உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன?
கால் செயல் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு கால் தாங்கிகள் மற்றும் ஊன்றுகோல்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதுபோல் கை, கால் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால், கை ஆகிய உபகரணங்களும், பள்ளி மாணவ, மாணவியருக்கு நவீன செயற்கை கை, கால் உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பெற கல்வி நிறுவனத்திடமிருந்து மாணவ, மாணவியர் சான்றிதழ் மற்றும் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டையுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படுகிறதா?
இரு கால்களும் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாணவ, மாணவியருக்கு பேட்டரியில் இயக்கும் மூன்று சக்கர வண்டி வழங்கப்படுகிறது. இதைப்பெறும் மாற்றுத் திறனாளிகள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வி நிறுவனச் சான்று, தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு அரசுப்பேருந்துகளில் அளிக்கப்படும் சலுகைகள் என்ன?
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பள்ளிகள் உண்டு. அந்தப் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாற்றுத் திறனுடைய மாணவ, மாணவியரும் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றுவர இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 100 கிலோ மீட்டர் தூரம்வரை எவ்வித நிபந்தனையுமின்றி இலவசமாக சென்று திரும்ப இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுடன் உதவிக்காக செல்பவருக்கும் இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது. செவித்திறன் பாதிக்கப்பட்டு வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது. மேலும், மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்தில் நான்கில் ஒரு பங்கு கட்டணச் சலுகையுடன் மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
பார்வையற்ற மாற்றுத் திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு நிதியுதவி வழங்கப்படுகிறதா?
பார்வையற்ற மாற்றுத் திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் பார்வையுள்ள சாதாரண நபரை ஊக்குவிக்கும் வகையில் ரூ.25 ஆயிரம் அளிக்கப்படுகிறது. அதில் ரூ. 12,500 ரொக்கமாகவும், ரூ. 12,500 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படுகிறது. அதுபோல் பட்டம் மற்றும் பட்டய படிப்பு படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதில் ரூ.25 ஆயிரம் ரொக்கமாகவும், ரூ.25 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படுகிறது.

No comments: